கொல்கத்தா:

ன்று மேற்குவங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வன்முறை காரணமாக 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை 7 மணிக்கு மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது.  மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதற்கிடையே தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதலே மோதல் வெடிக்கத் தொடங்கியது. அரசியல் கட்சியினர் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றது. வெடிகுண்டுகள் விசப்பட்டன. இதன் காரணமாக மேற்கு வங்காளம் முழுவதும் வன்முறைகளமாக காட்சி அளித்தது.

சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

அதுபோல பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தேவபிரசாத் தாஸ் மற்றும் அவருடைய மனைவி உஷா ஆகியோர் எரித்து கொல்லப்பட்டதாக மாவட்ட மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் ஷமிக் லஹிரி தெரிவித்துள்ளார்.

அதுபோல வன்முறை கலவரங்களை படம்பிடிக்க சென்ற பத்திரிகையாளர்கள் 5 பேரும் தாக்குதல்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கச்சராபாரி பகுதியில் பஞ்சாயத்து தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரையும் கலவரக்காரர்கள் எரித்துக் கொன்றுள்ள னர்.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலம் முழுவதும் நடைபெற்ற கலவரம் காரணமாக பல்வேறு வாக்குச்சாவடி மையங்கள் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் காரணமாக தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினர்.

மேலும் பல இடங்களில் வாக்களிக்க வந்த பெண்களின் உடைகளை கிழித்து வன்முறையாளர்கள் கீழ்த்தரமான செயல்களின் ஈடுபட்டதால், பெண்கள் வாக்களிக்காமல் திரும்பினர்.

பல இடங்களில் வன்முறை காரணமாக வாக்கு செலுத்த யாரும் வராததால் பல வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி கிடந்தன.

வன்முறைக்கு திரிணாமுல் காங்கிரஸ்தான் காரணம்  என்று கூறி மாநில காங்கிரசார் மாநில தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர்.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இந்த வரலாறு காணாத வன்முறைக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.