இஸ்லாம் அவதூறால் வன்முறை: பெங்களூருவில் 145 பேர் கைது; 17 பேர் மீது வழக்குப்பதிவு!

பெங்களூரு: பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் இஸ்லாம் மத கடவுள் குறித்து வெளியிட்ட முகநூல் பதிவு காரணமாக, இஸ்லாமியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தியின் உறவினா் ஒருவா் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய பதிவு போட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எம்.எல்.ஏ. வீட்டின் மீதும், காவல் நிலையத்தின் மீதும் இஸ்லாமி யர்கள் திரண்டு வந்து கலவரம் செய்தனர். எம்எல்ஏ வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தினர். மேலும்,  தீ வைப்பு சம்பவங்களும் நடை பெற்றன.

இதையடுத்து, காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை ஒடுக்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் வன்முறையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும், வன்முறையினரின் தாக்குதல் காரணமாக   60க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் காயமடைந்ததாக  தெரிவிக்கப்பட்டது.

வன்முறையைத் தொடர்ந்து  பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பகிர்தல், கலவரத்தில் ஈடுபட்டோர் என 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் கலவரத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.