ஆக்ரா:

பத்மாவதி படத்தில் வரலாற்றை தவறாத சித்தரித்து இருப்பதாகவும், இந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

‘பத்மாவதி’ படத்தை தடை விதிக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அலாகாபாத் உயர்நீதிமன்றமும் இதுதொடர்பான வழக்கை முன்னெடுக்க மறுத்துவிட்டது.

இந்நிலையில் ‘பத்மாவதி’ படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என ஆக்ரா இந்து ஆர்வலர்கள் மிரட்டல் விடுத்து உள்ளனர். பத்மாவதி படத்தை வெளியிட்டால் கடும் விளைவுகள் நேரிடும் என திரையரங்குகளுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து உள்ளது.

பத்மாவதி திரைப்படம் திரையில் வெளியாவதற்கு முன்னதாகவே ராஜஸ்தான், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்து ஜக்ரான் மஞ்ச் அமைப்பின் மாவட்ட தலைவர் அமித் சவுதாரி பேசுகையில், ‘‘இந்து கலாச்சாரத்திற்கு எதிரான திரைப்படங்களை எதிர்ப்போம்’’ என்றார்.

உ.பி. அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் ராஜா மகேந்திர அரிதிமான் சிங் கூறுகையில், ‘‘ இது ராஜ்புத் இனத்தவர்களின் கவுரம் சம்பந்தப்பட்ட விஷயம். அனைத்து திரையரங்குகளிலும் படத்தை தடை செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்திலும் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.