காஞ்சிபுரம்:

டந்த 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வரும் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  வரும் 16, 17 தேதிகளில் விஐபி,  விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா அறிவித்து உள்ளார்.

40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வரும் அத்திவரதர் இன்று 38வது நாளாக பக்தர்கள் அவரை தரிசித்து வருகின்றனர்.  கடந்த 1ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  இதன் காரணமாக, வாகனங்கள் நகர எல்லையிலேயே நிறுத்தப்பட்டு வருகின்றன.

அத்திவரதர் தரிசன வைபவம்  வரும் 17ம் தேதியுடன்  நிறைவடைய உள்ளது. இதன் காரணமாக வரும் 16 மற்றும் 17ம் தேதிகளில் விஐபி விவிஐபி  சிறப்பு தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை என்ற நிலையில் அடுத்த 16, 17 தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை சுமார் 18 மணிநேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில்,  கூட்ட நெரிசல் காரணமாக மேலும்  3 மணிநேரம் கூடுதலாக தரிசனத்துக்கு வழி வகை செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசனம் முடித்து வெளியே செல்வதற்கு விஐபி விவிஐபி நுழைவு வாசல்கள் சீரமைக்கப்படும் என்றும்,  தினசரி பிரச்சனைகளை தவிர்க்க விஐபி விவிஐபி பாஸ் வைத்துள்ளார்களா என மாவட்ட எல்லையிலே சோதனை செய்யப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

மேலும்,  பக்தர்கள் தங்கி தரிசனம் செய்வதற்கு 35000 பேர் தங்கும் வகையில் 3 இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும்,  ஆகஸ்ட் 17ம் தேதி நண்பகல் 12 மணிக்கு பொதுதரிசன வழியான கிழக்கு கோபுர வாசல் அடைக்கப்பட்டு மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெறும்.

ஏற்கனவே 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் கூடுதலாக 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.