சென்னை:

சென்னையில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவ தால், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், சுமார் 50 சதவிகிதம் அளவுக்கு நோயாளிகள் அதிகரித்து உள்ள தாகவும் கூறப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வீதிகள்தோறும் தண்ணீர் தே\ங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக வடசென்னைப் பகுதியில், மழைநீரும், கழிவு நீரும் சேர்ந்து கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது.

இதன் காரணமாக  சென்னையில், டெங்கு, டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்களுடன், மர்ம காய்ச்ச லும் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அருகிலுள்ள கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக வடசென்னை பகுதியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை, 2,000க்கும் மேற்பட்டோர் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையை  நாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமும், சராசரியாக, 50க்கும் மேற்பட்டோர், காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில், புறநோயாளிகள் பிரிவு நேரம் முடிந்த பின், காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, டாக்டர்கள் மறுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில், அலட்சியப்படுத்தும் அரசு டாக்டர்கள் மீது, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலுக்கு சுகாதாரச் சீர்கேடே காரணம் என்றும்,  திறந்த வெளி சாக்கடையில் அதிக அளவு உற்பத்தியாகும் கொசுக்களும் நோய் பரவலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

24 மணி நேரத்திற்கு மேலாக காய்ச்சல் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.