குரங்கை வைத்து அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் குரங்கை வைத்து பேருந்தை ஓட்டியதால் அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குரங்கு பேருந்தை ஓட்டும் வீடியோ வைரலான நிலையில் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

monkey

கர்நாடக மாநிலம் தவங்கரேயில் மாநில அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி பேருந்து டெப்போ உள்ளது. இங்கு அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் பிரகாஷ் இவர் குரங்கு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி அளித்து வருகிறார் பிரகாஷ்.

தான் ஓட்டுநராக பணியாற்றும் பேருந்தில் அந்த குரங்கையும் அடிக்கடி அழைத்து வந்துள்ளார் பிரகாஷ். சில நாட்களாக குரங்குடன் சேர்ந்து பணிக்கு வந்த பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் மீது குரங்கை அமர வைத்து அதனை இயக்கியுள்ளார்.

ஓட்டுநர் பிரகாஷ் கியர் மற்றும் பிரேக்கை மட்டும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள குரங்கு ஸ்டியரிங்கை பிடித்த லாவகமாக ஓட்டியுள்ளது. இதனால் அந்த பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த காட்சிகளை மொபைல் போனில் படம் பிடித்து சிலர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். குரங்கு பேருந்தை ஓட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையடுத்து தகவல் அறிந்த கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிர்வாகம் பிரகாஷை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.