லண்டன்: ஐசிசி வகுத்துள்ள நிலை 1 கிரிக்கெட் விதிமுறையை மீறிய குற்றத்திற்காக இந்திய கேப்டன் விராத் கோலிக்கு, ஆட்ட ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஆஃப்கன் இன்னிங்ஸில், 29வது ஓவரின்போது, எல்பிடபிள்யூ அவுட் குறித்து, நடுவரை நோக்கி ஆக்ரோஷமாக முறையிட்டுக் கொண்டே சென்றார் கோலி. இதன் காரணமாகத்தான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல் ஐசிசி விதிமுறை பிரிவு 2.1 ஐ மீறிய செயலாகும். அதாவது, இதை மிதமிஞ்சிய முறையீடு என்று வகைப்படுத்துகின்றனர். இந்தக் குற்றத்திற்காக, குறைந்தபட்ச தண்டனையாக அதிகாரப்பூர்வ கண்டனம் மற்றும் அதிகபட்ச தண்டனையாக போட்டி சம்பளத்தில் 50% அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ஒழுங்கீன மீறல் புள்ளிகள்(demerit points) வழங்கப்படும்.

தன் மீதான குற்றச்சாட்டை விராத் கோலி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் செலுத்துவதற்கு சம்மதித்துள்ளார். விராத் கோலி ஏற்கனவே கடந்தாண்டு ஒரு ஒழுங்கீன மீறல் புள்ளியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.