டாக்கா டி20 போட்டிகளில் விராத் கோலி கலந்துகொள்ள வேண்டும் – ‍பிசிபி ஆசை!

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள ஆசிய லெவன் – உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டிகளில், இந்திய கேப்டன் கோலியும் கலந்துகொள்ள வேண்டுமென்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

வங்கதேசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ஆசிய லெவன் – உலக லெவன் அணிகள் பங்குபெறும் இரண்டு டி-20 போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.

எனவே, இப்போட்டியில் இந்திய அணியின் விராத் கோலி இடம்பெற வேண்டுமென்றும், அதற்கான நடவடிக்கைகளை பிசிசிஐ மேற்கொள்ள வேண்டுமென வங்கதேசம் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “இந்தியாவின் சார்பாக 4 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்றும், அவர்கள் யார் என்பது இனிமேல்தான் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.