மும்பை: மேற்கிந்திய தீவுகளில் நடந்துமுடிந்த ஒருநாள் தொடரில், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரண்டு சதங்களை அடித்ததன் மூலம் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.

ஒருநாள் அரங்கில் தனது 43வது சதத்தை பதிவுசெய்துள்ளார். அடுத்தடுத்து 2 போட்டிகளில் சதமடித்ததன் மூலம் கரீபியனில் நடைபெற்ற தொடர்ச்சியான 3 ஒருநாள் போட்டிகளில் சதமடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை செய்துள்ளார் கோலி. கடந்த 2017ம் ஆண்டு அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில் சதமடித்திருந்தார்.

மேலும், பத்தாண்டு கிரிக்கெட்டில் 20000 ரன்களை ஒட்டுமொத்தமாக கடந்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் மோடி செய்துள்ளார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாண்டில், அனைத்துவகை கிரிக்கெட்டிலும் அவர் மொத்தமாக சேர்த்து எடுத்த ரன்கள் 20,018.

முன்னதாக இந்த சாதனையை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் செய்திருந்தார். அவர் கடந்த 2000ம் ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்திருந்தார். அவர் எடுத்திருந்த மொத்த ரன்கள் 18,962. தற்போது அந்த சாதனையை விராத் கோலி விஞ்சியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் விரைவில் சச்சின் டெண்டுல்கர் அடித்துள்ள 49 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.