பிரச்சினை பிட்சில் இல்லை, பேட்ஸ்மென்களிடம்தான்: விராத் கோலி

அகமதாபாத்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவடைந்ததற்கு, இரு அணிகளின் பேட்ஸ்மென்களின் தவறுகள்தான் காரணமே ஒழிய, பிட்ச்சின் தவறு அல்ல என்றுள்ளார் இந்திய அணி கேப்டன் விராத் கோலி.

அகமதாபாத் பிட்ச் ஒரு சரியான பிட்ச் அல்ல என்று மைக்கேல் வான் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் குற்றம் சுமத்திய நிலையில் இவ்வாறு பேசியுள்ளார் விராத் கோலி.

அவர் கூறியுள்ளதாவது, “உண்மையாக கூறவேண்டுமானால், இரு அணிகளின் பேட்டிங் திறமை, அதன் உண்மையான தரத்திற்கு வெளிப்படவில்லை. நாங்கள் 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தோம். பின்னர், 150 ரன்களுக்குள்ளாகவே 10 விக்கெட்டுகளையும் இழந்தோம்.

அந்த பிட்ச், முதல் இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருந்தது. இரு அணிகளின் பேட்ஸ்மென்களும் சரியாக ஆடவில்லை. இந்தியாவின் ரோகித் ஷர்மாவும், இங்கிலாந்தின் கிராலேவும் மட்டுமே ஓரளவு சமாளித்து ஆடினார்கள்.

மொத்தம் 30 விக்கெட்டுகளில், 21 விக்கெட்டுகள் நேராக வந்த பந்துகளில் காலியானது என்பது கொடுமையானது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது நமது தற்காப்பான ஆட்டத்தைப் பொறுத்தது” என்றுள்ளார் விராத் கோலி.