டில்லி:

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலிக்கு டில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சிகத்தின் கிளை,  தலைநகர் டில்லியிலும்  உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உலக தலைவர்கள் மட்டுமின்றி இந்தியாவின் பிரபலமான தலைவர்களின் மெழுகு சிலைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில்  இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலையும் இடம் பெறவுள்ளது.

ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது விராட் கோலியும் இணைய இருக்கிறார்.

மெழுகு சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக லண்டனில் இருந்து டில்லி வந்துள்ள அருங்காட்சியக  சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து கோலி கூறும்போது,  ‘இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய மரியாதையாகக் கருதுகிறேன். இது என்வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. இதற்காக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியக நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.