டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமைப் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது பிசிசிஐ.

கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே (45) கடந்த ஜூன் மாதம் நியமி க்கப்பட்டார். அவர் ஓராண்டுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பார் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.

இதன்படி கும்ப்ளேவின் பதவிக்காலம் அடுத்து நடைபெறுகிற சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் முடிவடைகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்குப் புதிய நபரைத் தேர்ந்தெடுக்கும் பணியைத் பிசிசிஐ தொடங்கியுள்ளது.

புதிய பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படடு கடைசி நாளான கடந்த 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பயிற்சியாளர் தேர்வு பணியில் அணில் கும்ப்ளே நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
இந்த பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, இங்கிலாந்து வீரர் ரிச்சர்டு பைபஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தோடா கணேஷ், முன்னாள் இந்திய ஏ அணி பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இதில் மூடி மற்றும் ராஜ்புட் ஆகியோர் கடந்த முறையும் போட்டியிட்டார்கள். இதில் கும்ப்ளே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் சேவாக் பங்கேற்றவுடன் தற்போது பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. பல கிரிக்கெட் போட்டிகளின் முடிவை மாற்றியவர் சேவாக். இந்திய அணி இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவர்.

இவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 586 ரன்கள் எடுத்துள்ளார். 251 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி 8 ஆயிரத்து 273 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு பயிற்சியாளர் பணிக்கான முன் அனுபவம் கிடையாது. பஞ்சாப் கிங்ஸ் 11 அணிக்கு முகவராக இவர் இருக்கிறார். இவரை இந்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே விண்ணபித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் வீராத் கோலிக்கும் கும்ப்ளேக்கும் இடையே கருத்து மோதல் என்ற குற்றச்சாட்டை பிசிசிஐ இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி நிராகரித்தார். சேவாக் பயிற்சியாளராக வர வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. நேர்காணலின் போது தான் சேவாக் விண்ணப்பத்திருந்தது கும்ப்ளேவுக்கு தெரியவந்துள்ளது.

மேலும், டாம் மூடியும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார். இவர் ஒரு சர்வதேச பயிற்சியாளர் என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார். இலங்கை அணிக்கும், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இவர் பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்த அனுபவம் காரணமாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இவரது பெயரும் பரிசீலனையில் உள்ளது.

பைபஸூக்கு அவ்வளவு வலுவான கிரிக்கெட் வரலாற்று பின்னணி இல்லை. ஒரே ஒரு முதல் தர கிரி க்கெட்டில் மட்டுமே விளையாடியுள்ளார். அதோடு ஜாகீர் கான் பெயரும் இந்த பதவிக்கு அடிபடுகிறது. நேர்காணல் அநேகமாக இங்கிலாந்தில் நடக்க வாய்ப்புள்ளது.

தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள கங்குலி, விவிஎஸ் லஷ்மன் மற்றும் சேவாக் ஆகியோர் தற்போது இங்கிலாந்தில் சாம்பியன் டிராபி போட்டியில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளனர். மற்றவர்களுடன் ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.