கொரோனாவுக்கு பலியான விருத்தாச்சலம் வட்டாட்சியர் கவியரசு…! மக்கள் சோகம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்த கவியரசு, கரோனா தொற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் விருத்தாசலத்தி வட்டாட்சியராக இருந்த கவியரசு என்பவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இது பற்றி அப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது: பணியின் போது பம்பரமாகச் சுழன்று மக்களுக்காக பணியாற்றியவர், இயற்கையின் மீதும், வரலாற்றின் மீதும் தீராத காதல் கொண்டவர், மக்கள் பணிக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.

கொரோனா பரவல் காலத்தில் கடுமையாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். விருத்தாசலத்தில் பணியாற்றிய 2 ஆண்டுகளில் வரலாற்றை கண்டறியவும், மீட்டெடுக்கவும் அவர் அரும்பாடுபட்டார். 100க்கும் மேற்பட்ட நடுகற்கள், கொற்றவை சிலைகள், பண்டைக்கால வழிபாட்டு உருவங்கள், சோழர்கால, பல்லவர்கால வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்.

விருத்தாசலம் பகுதியில் வாழ்ந்த, வாழ்கின்ற ஜமீன் வாரிசுகளை சந்தித்து அவர்களை பற்றி வெளியுலகுக்கு தெரிய வைத்தவர். கொரோனா நோயாளிகளை இனம் கண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, அவர்களோடு தொடர்பு கொண்டவர்களை தனிமை முகாமுக்கு அனுப்புவது என்று பம்பரமாக சுற்றி வந்தவருக்கு அதுவே சிக்கலாகி விட்டது.

10 நாட்களுக்கு முன் சளி, காய்ச்சல் வந்ததால் பரிசோதித்துக் கொண்டார். பின்னர் 10ம் தேதி கொரோனா உறுதியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை வரை அலுவல் பணிகளை கவனித்தவர், இரவு மருத்துவமனையில் இருந்தபோது தனது முகநூலில் மிகுந்த நம்பிக்கையோடு மக்களுக்கு இந்த செய்தியைச் சொன்னார்.

‘அன்புக்கும் பாசத்திற்கும் உரிய விருதை வட்ட வாழ் பெருங்குடி மக்களே. என் மேல் எப்போதும் பாசமழை பொழியும் ஊடக நண்பர்களே. எப்போதும் அன்பு பாராட்டும் காவல் அலுவலர்களே. எனது இரண்டாண்டு வருவாய் வட்டாட்சியர் பணியில் உடன் பயணித்த எனது பாசமிக்க கிராம நிர்வாக அலுவர்களே. அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களே. வருவாய ஆய்வாளர்களே. கிராம உதவியாளர்களே. உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை சிரம் தாழ்த்தி சமர்ப்பித்துக் கொள்கின்றேன்.

கோவிட் – 19 அறிகுறிகள் காரணமாக தற்போது சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளதால் வருவாய் வட்டாட்சியர் பணியில் இருந்து விலகி விடைபெறுகின்றேன். சிறப்பு நன்றிகள், எனது ஈப்பு ஓட்டுநர் பாலு ஒரு சகோதரனைப்போல இதுகாறும் எனை பாதுகாத்தாய். மீண்டும் மீண்டு வந்து அனைவருக்கும் நன்றி சொல்வேன் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவியரசு’ என்று எழுதி இருந்தார். மார்ச் 27-ம் தேதி மகளுக்கு முகநூலில் எழுதியவர் தன் ஆசைமகளின் அன்புமுகம் காணாமலே விடைபெற்று விட்டார்.