நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி: நாசர் அறிவிப்பு

--

பாலியல் புகார்களை விசாரிக்க நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்படும் என்று சங்க தலைவர் நாசர் தெரிவித்தார்.

மீடூ விவகாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று  கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கூடிய தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்கத்தில் பாலியல் புகாரை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்க தலைவர் நாசர், “தென்னிந்திய நடிகர் சங்கம் இன்று நடந்த சிறப்பு செயற்குழுவில்  இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.அங்கத்தினர்களுடைய உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ‘விசாகா குழு’ ஒன்று உருவாக்கப்படும்.

இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு மகளிரும் இடம்பெறுவர்.  பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார். ஆண்பால், பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும்.

2. படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளையும் உடனடியாக தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது” என்று நாசர் தெரிவித்தார்.