10 பேரை பலிகொண்ட விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு… எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு

--

விசாகப்பட்டினம் :

ந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை நடந்த கேஸ் ஆலை விபத்தில் இதுவரை ஒரு குழந்தை உட்பட 10 பேர் இறந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம் பெருநகர முனிசிபல் கார்போரேஷன் (GVMC) எல்லைக்கு உட்பட்ட கோபாலபட்டினம் அருகில் உள்ள வேப்பகுண்டாவில் அமைந்துள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் கடந்த 40 நாட்களாக பூட்டப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, இன்று திறப்பதாக இருந்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில் இந்த ஆலையில் இருந்து பாலி வினைல் கிளோரின் (PVC) வாயு கசிவு ஏற்பட்டதால் இந்த ஆலை அமைந்திருக்கும் வேங்கடபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலையில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் இதுபற்றி தெரியவில்லை, அருகில் உள்ள பகுதிகளில் இருந்த மக்கள் புகைமண்டலத்தை பார்த்து விடியற்காலை இங்கு வந்த போது அவர்களில் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்தனர்.

விசாகப்பட்டினம் நகர நிர்வாகத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலை அமைந்துள்ள வேங்கடபுரம் பகுதியில் சுமார் 1500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மூச்சு திணறல் காரணமாக மயக்கமடைந்த 200 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை, 5 க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் மெகபதி கௌதம் ரெட்டி கூறினார். மேலும், இந்த அசம்பாவிதத்திற்கு கவனக்குறைவாக செயல்பட்ட ஆலை நிர்வாகமே காரணம் என்றும் கூறினார்.

தென் கொரியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான எல்.ஜி. பாலிமர்ஸில் நடந்த இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனிடம் விசாரித்தார். மேலும், ஆந்திர முதல்வரும் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட இருப்பதாக தெரிகிறது.