நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைக்க முயன்றதாக கைது

சென்னை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலக பூட்டை உடைக்க முயன்ற நடிகர் விஷால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது.   இந்த சங்கத்தின் தலைவராக விஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.    இந்த சங்கத்தில் உள்ள ஒரு பிரிவினர் விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.   நடிகர் விஷால் பொதுக்குழுவில் ஆலோசிக்காமால் பல முடிவுகளை எடுத்துள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார்கள்.  அத்துடன் அந்த அணியில் உள்ள ஜேகே ரித்தீஷ் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று சந்தித்துள்ளனர்.    இந்த பரபரப்புக்கு இடையில் நடிகர் விஷால் தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு வந்து பூட்டை உடைக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதை ஒட்டி சங்க அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.  இன்று காலை சுமர் 11 மணிக்கு அங்கு வந்த விஷால் நான் சங்கத்தின் தலைவராக இருக்கும் போது வேறு யாரோ அலுவலகத்தை பூட்டி உள்ளனர்.  அப்படி இருக்க இங்கு இத்தனை பாதுகாப்பு எதற்கு?’ என காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சாவி பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை வாங்கி வந்து திறக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கூறி உள்ளனர்.   விஷால் அதைக் கேளாமல் பூட்டை உடைக்க முயன்றதால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விஷாலுடன் இணைந்து பூட்டை உடைக்க முயன்ற நடிகர் மன்சூர் அலி கான் மற்றும் விஷாலின் ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அவர்கள் அனைவரும் தற்போது தி நகரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.