டிகர் விஷால் படங்களுக்கு தடை விதிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. கடந்த வார‘ஆனந்தவிகடன்’ இதழில்  விஷால் பேட்டி வெளியாகி இருந்தது. அதில்,  அடுத்து தான் தயாரிப்பாளர் சங்கத்தில் நுழையப் போவதாக விஷால் தெரிவித்திருந்தார். மேலும், “தயாரிப்பாளர்  சங்கம் அங்கே தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சங்கம் செயல்படாமல் முடங்கிப் போயிருக்கிறது” என்றும் விமர்சித்திருந்தார்.
இந்த கருத்துக்கள் தயாரிப்பாளர்கள் தரப்பை கொதிக்க வைத்தது.  “விஷாலும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்தானே.. தனது மனக்குறையை சங்க கூட்டத்தில் தெரிவித்திருக்கலாமே” என்று ஆதங்கப்பட்டார்கள்.
இந்த நிலைமையில் நேற்று  மாலை சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நடிகர் விஷால் ஆனந்தவிகடனுக்கு அளித்த பேட்டி பற்றி உறுப்பினர்களிடையே காரசாரமான  விவாதம் நடைபெற்றது.  நடிகர் மன்சூரலிகான் மட்டுமே விஷாலுக்கு ஆதரவாக பேசவே,  அவரது கருத்துக்கு எதிராக சில தயாரிப்பாளர்கள் கடுமையாக பேசியிருக்கிறார்கள்.

தாணு  - விஷால்
தாணு – விஷால்

கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு, “விஷாலை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம்தான் ஏற்பட்டிருக்கிறது. யாரும் லாபம் சம்பாதித்ததில்லை.  தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி விஷால் பத்திரிகையில் பேசியது தவறு.  விஷால் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். அவருடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.” என்றார்.
இறுதியாக விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரும்பாலோர் கருத்து தெரிவித்தனர்.
“தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி விமர்சித்து கொடுத்த பேட்டிக்காக ஒரு வார காலத்திற்குள் நடிகர் விஷால் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், விஷால் நடிக்கும் (கத்தி சண்டை படம் தவிர) வேறு எந்த படத்திற்கும் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை..” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.