‘லைகா’வோடு கூட்டு சேர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தை அழிக்கிறார்: விஷால் மீது எதிரணியினர் குற்றச்சாட்டு

சென்னை:

யாரிப்பாளர்களை அழிக்க நினைக்கும் ‘லைகா’வோடு கூட்டு சேர்ந்து தயாரிப் பாளர் சங்கத்தை அழிக்கிறார் விஷால்  என்று, அவருக்கு எதிராக களமிறங்கி உள்ள தயாரிப்பாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடவடிக்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தயாரிப்பாளர்கள் ஒரு தரப்பினர் தனி அணியாக செயல் பட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தி சாவியை அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்ற விஷால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், விஷாலுக்கு எதிரணியை சேர்ந்த தயாரிப்பாளர்களான பாரதி ராஜா, ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், ஏ.எல்.அழகப்பன் உள்பட 10 பேர், இன்று காலை  தலைமைச் செயலகம் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு கொடுத்தனர்.

மனுவில், ’தயாரிப்பாளர் சங்கத்துக்கு 4 மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என்றும்,  விஷால் தலைமையிலான சங்க நிர்வாக குழுவினரிடம் சங்க கணக்கு வழக்குகள் பற்றி விளக்கம் கேட்க வேண்டும். சங்கத்தின் காப்புநிதி 7.85 கோடி ரூபாய் பொதுக்குழுவின் ஒப்புதல் பெறாமல் செலவு செய்யப்பட்டுள்ளது. விஷால் தன்னிச்சையாக செயல்படுகிறார். இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்க உறுப்பின ரான கே.ராஜன், ‘நன்றாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் படுகுழிக்குள் தள்ளிவிட்டார். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து 150 பேரை நீக்கி ஹிட்டலர் போல செயல்படுகிறார் என்றார்.

மேலும்,  தமிழ் ராக்கர்ஸ் மற்றும் லைகாவோடு சேர்ந்து கொண்டு 33 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். தயாரிப்பாளர்களை அழிக்கக் கூடியவர்களுடன் சேர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தை அழித்து வருகிறார்.. எங்களுக்கு நல்ல நிர்வாகம் வேண்டும்’ என்று கூறினார்.

பின்னர் பேசிய இயக்குனர் பாரதிராஜா, ‘தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று வைப்புநிதியாக 7.85 கோடி ரூபாய் இருந்தது. அந்த 7.85 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்டால் இதுவரையில் பதில் இல்லை. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துக்கு என்று பதிவுத்துறை அலுவலகம் ஒன்று உண்டு. அங்கேதான் கணக்கு வழக்குகள் தொடர்பான அனைத்து விவகாரங்களும் நடைபெறவேண்டும். ஆனால், விஷால் தலைவராகப் பொறுப்பேற்ற புதிதாக ஒரு கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அலுவலகம் அங்கே நடைபெறுகிறது.

எனவே, இதில் ஏதோ ஒரு மறைவு இருக்கிறது. இந்த சங்கத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, காரணம் இன்றி செயல்பட்டுவந்த அலுவலகத்தை பூட்டுப் போட்டுள்ளோம். இதுதொடர்பாக, தமிழக அரசிடம் முறையிட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஷால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வராமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு  என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.