`உலக அளவில் கிளர்ச்சி வெடிக்கும்!’ – அமெரிக்காவுக்கு  வி.எச்.பி. மிரட்டல்  

`உலக அளவில் கிளர்ச்சி வெடிக்கும்!”  என்று  அமெரிக்காவுக்கு  வி.எச்.பி. மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்காவின் உளவு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு (Central Investigative Agency, – CIA), `World factbook’ என்னும் தகவல் புத்தகத்தை வெளியிட்டது. அதில் உலக நாடுகளில் அரசியல், பொருளாதாரம், அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தொகுத்தளிக்கப்பட்டிருந்தன.

அந்தப் புத்தகத்தில் இந்திய அமைப்புகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்துத்துவ அமைப்புகளான விஷ்வ இந்து பரிசத்,  பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் மத ரீதியிலான தீவிரவாத அமைப்புகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தன. பா.ஜ.க.வின் தாய் அமைப்பான  ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு தேசியவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் எதிர்ப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

`அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பினர் தங்கள் கருத்தைத் திரும்பப்பெறவில்லை என்றால் உலகளாவிய கிளர்ச்சியை ஏற்படுத்துவோம்’ என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மிரட்டல்விடுத்திருக்கிறது.

அந்த அமைப்பின் தலைவர் சுரேந்திர ஜெயின்  `சி.ஐ.ஏ. வெளியிட்டிருப்பது  உண்மைக்கு மாறான தகவல். மத்திய அரசு தலையிட்டு சி.ஐ.ஏ அமைப்பு மீது அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்’ என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.