கோவை:

மிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகளின் அதிரடி பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்காக அதன் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கோவையில் பிரசாரம் செய்து வரும் கமல்ஹாசன், அந்த தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு என தனி தேர்தல் அறிக்கை ஒன்றை கமல் ஹாசன்  செய்தியாளர்கள் முன்னிலையில்  வெளியிட்டார்.  ‘விஷன் கோயம்புத்தூர் 2024’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த தேர்தல் அறிக்கையில், கோவைத் தொகுதிக்கான நீர் மேலாண்மை முதல் விவசாயத்துக்கு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள்  குறித்தும், கோவை நகர தொழில் வளர்ச்சி குறித்தும் விளக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய கமல், கோவை தொகுதியில்  போட்டியிடும் மகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது,   ‘நாங்கள் சில மணி நேரத்துக்கு முன்னர் கோயம்புத்தூர் தொகுத்திக்கென்று ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறோம். அந்த அறிக்கையில் இருக்கும் அனைத்தும் செயல்படுத்தக் கூடியவைதான். அப்படி எங்களால் செயல்படுத்த முடியவில்லை என்றால், அதை ஆதாரபூர்வமாக நீங்கள் நிரூபித்தால், சம்பந்தப் பட்டவர்களின் ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொடுப்பது என் கடமை என்றார்.

மேலும்,  தமிழகம் இன்று அரசியல் புரட்சியின் விளிம்பில் இருக்கிறது. நாம் எல்லோரும் மாபெரும் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். நீங்கள் ஏப்ரல் 18 ம் தேதி உங்கள் கடமையைச் செய்யுங்கள். நாங்கள் ஆட்சி அரியணைக்கு வரும்போது எங்களின் கடமையைச் செய்வோம்’ என்றார்.