சேவை மற்றும் உணவு வசதிகளைக் குறைக்கும் விஸ்தாரா விமான நிறுவனம்

டில்லி

டாடாவின் விமான நிறுவனமான விஸ்தாரா தனது சேவைகளை  தொடங்கும் போது தனது சேவை எண்ணிக்கை மற்றும் உணவு வசதிகளைக் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.  தற்போது இந்தியாவில் சரக்கு விமான போக்குவரத்து மட்டுமே நடைபெற்று வருகிறது.  வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால் மீண்டும் விமானப் போக்குவரத்து படிப்படியாகத் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பப்படுகிற்து.

தனியார் நிறுவனமான டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து விஸ்தாரா என்னும் விமானச் சேவை நிறுவனத்தை நடத்தி வருகின்றன.  தற்போது கொரோனா தாக்குதலால் சேவையை முழுமையாக நிறுத்தி உள்ள விஸ்தாரா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்தைக் குறைத்துள்ளது.  மேலும் சிலரை ஊதியம் இல்லாத விடுப்பில்  நிர்வாகம் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு முடிந்து மீண்டும் விமானச் சேவை தொடங்கினால் தனது சேவை தடங்களில் 80% வரை குறைக்க உள்ளதாக விஸ்தாரா நிறுவனம் அறிவித்துள்ளது.  அத்துடன் அரசின் வழிமுறைக்கு ஏற்ப ஒரு சில இடங்களில் சேவைகளை உடனடியாக தொடங்குவதிலும் மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.   தற்போது ஊரடங்கு நேரத்தில் கடும் இழப்பை இந்த நிறுவனம் சந்தித்துள்ளது.

அதையொட்டி விமானத்துக்குள் வரவேற்பு பானம் சூடான உணவு மற்றும் சூடான பானங்கள் உள்ளிட்ட உணவு வசதிகளைக் குறைக்க எண்ணி உள்ளது,   விமான பயணிகளுக்குக் குளிர்ந்த உணவு மற்றும் பானங்களை மட்டும்  வழங்க நிறுவனம் உத்தேசித்துள்ளது.  அத்துடன் உணவின் வகைகளும் குறைக்கப்பட உள்ளன.

இனி பயணிகளுக்கு 200 மிலி நீர் புட்டிகள் மட்டுமே வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி காபி, துடைக்கும் துவாலை ஆகியவையும் வழங்கப்பட மாட்டாது. விமானத்தினுள் செய்தித் தாள் மற்றும் பத்திரிகைகள் வழங்குவது நிறுத்தப்பட உள்ளது.  அத்துடன் விமானிகள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் முகக் கவசம் மற்றும் கையுறையுடன் பயண நேரம் முழுவதும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.