சென்னை:

பொங்கலை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும், அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்பபடமும் வெளியாகிறது. இரு நடிகர்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில் பொங்கல் வெற்றியை சுவைக்கப்போவது யார் என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஏற்கனவே டந்த 1997ம் ஆண்டு ரஜினி நடித்த அருணாச்சலம் படமும் அஜித் நடித்த ராசி படமும் ஒரே நேரத்தில் வெளியாகி இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 21 ஆண்டு களுக்கு பிறகு இருவரின் படமும் மீண்டும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இது இரு நடிகர்களின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அஜித்தின் விஸ்வாசம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக பட விநியோகஸ்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. தியேட்டர்களை பிடிப்பதிலும் இழுபறி நீடித்தது.  தியேட்டர்களை வசப்படுத்துவதில் கடுமையான  போட்டி நிலவி வருகிறது.

இதற்கிடையில், இரு படங்களில் டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் சமுக வலைதளங்களில், பேட்ட படத்தின் டிரைலரை பின்னுக்கு தள்ளி டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் 450 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டு உள்ளது. ஆனால், சன் பிக்சர்ஸ் தனது அரசியல் அதிகாரத்தின் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட  தியேட்டர்களை கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எஞ்சியுள்ள தியேட்டர்களில் மற்ற படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு படங்களும் வெளியிட விநியோகஸ்தர்களிடியே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில்,  வியாபார ரீதியாக இரு படங்களும் லாபத்தை ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தியேட்டர்களில் கிடைக்கும் வருமானத்தை பொறுத்த மாஸ் காட்டபோவது யார் என்பது தெரிய வரும்.