விசாகபட்டினம்:
ந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விஎஸ்பி ஆலையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தொழிலாளர்கள் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விஎஸ்பி ஆலையில் மத்திய அரசின் பங்குகளை விற்க இருப்பதாகவும், ஆலைக்கும் மாநில அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு தொழிலாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் குர்மன்னபலேம் பகுதியில் உள்ள ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சிஐஎஸ்எப் படையினர் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அப்போது, அங்கு வந்த ஆலையின் நிதித்துறை இயக்குனரை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அதிகாரியை பாதுகாத்து சிஐஎஸ்எப் படையினர் அனுப்பி வைத்தனர்.

இந்த போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் குஜுவாகா மற்றும் அணகபெல்லே வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. மத்திய அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் கடுமையாக்கப்படும் என சிபிஎம் தலைவர் கங்கா ராவ் தெரிவித்தார். இதனால் அங்க பதற்றமான சூழ்நிலை உள்ளது.

விஎஸ்பி நிர்வாகம், மத்திய அரசின் செயல்பாடுகளை தொழிலாளர்களிடம் இருந்து மறைத்து மத்திய அரசின் ஏஜென்ட் போல் நடந்து கொள்வதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.