புதுடெல்லி:

ராணுவத்தை மோடியின் படை என்று சொன்னவர் துரோகி என்று மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே.சிங் கூறியுள்ளார்.


கடந்த ஞாயிற்றுக் கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தீவிரவாதிகளுக்கு காங்கிரஸ் பிரியாணி கொடுக்கிறது. ஆனால், மோடியின் ராணுவம் வெடிகுண்டுகளுக்கும், துப்பாக்கிக் குண்டுகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது என்றார்.

இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் கண்டனத்துக்குள்ளாகியது.

இந்நிலையில் பிபிசி-க்கு பேட்டியளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், இந்திய ராணுவத்தை மோடியின் ராணுவம் என்று யாரோ ஒருவர் சொல்லியிருப்பது தவறு மட்டுமல்ல. அத்தகைய கருத்தைச் சொன்னவர் துரோகி.

ராணுவம் என்பது நாட்டுக்கு சொந்தமானது. அது அரசியல் கட்சிக்கு சொந்தமானது அல்ல.
தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல்கூட அவர்கள் அத்தகைய கருத்தை சொல்லியிருக்கலாம்.

ராணுவத்தினரையும் அரசியல் கட்சியின் தொண்டர்களையும் கட்சிகள் கலக்கக் கூடாது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் கப்பற்படை தலைவர் எல்.ராம்தாஸ், ஆதித்யநாத் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின்பேரில்,இது குறித்து விளக்கம் கேட்டு உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.