மாஸ்கோ

தாம் ரஷ்ய அதிபராக 2036 ஆம் வருடம் வரை தொடர புதிய சட்டத்தை விளாடிமிர் புதின் இயற்றி உள்ளார்.

தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார்.    கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வரும் புதினுக்கு தற்போது 68 வயதாகிறது.  வரும் 2024 ஆம் ஆண்டுடன் புதின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கமாகும்.  ரஷ்ய நாட்டு சட்டப்படி ஒருவர் தொடர்ந்து இருமுறை மட்டுமே அதிபர் பதவியில்  தொடர முடியும்.   புதின் ஏற்கனவே இருமுறை பதவி வகித்துள்ளார்.  இந்நிலையில் புதின் பதவிக்காலத்தை  வரும் 2036 ஆம் வருடம் வரை நீட்டிக்கச் சட்டம் இயற்றப்பட்டது.

அதாவது மேலும் இரு தேர்தல்கள் வரை அவரது பதவிக்காலம் இந்த சட்டத்தின் மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   இந்த சட்டத்துக்கு ஏற்கனவே நடந்த வாக்கெடுப்பில் மக்கள் ஆதரவு அளித்தனர்.  அதன் அடிப்படையில் அதிபர் புதின் நேற்று ஒப்புதல் அளித்து இந்த சட்டத்தை நிறைவேற்ற அவரே கையெழுத்து இட்டுள்ளார்.

தற்போது 68 வயதாகும் புதின் தாம் இறக்கும் வரை அதிபர் பதவியில் இருக்க இவ்வாறு புதிய சட்டம் இயற்றியதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.   ஆனால் இதுவரை இதற்கு புதின் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லை.