கடும் நஷ்டம் : வோடபோன் மற்றும் ஐடியா இணைகிறது.

 

டில்லி

வோடபோன் மற்றும் ஐடியா தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் இரு நிறுவனங்களும் இணைய உள்ளன.

ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகு தொலை தொடர்புத் துறையில் இந்தியாவில் கடும் போட்டி உள்ளது.   வாடிக்கையாளர்களை தக்க வைக்க கடும் போட்டி நிலவுகிறது.   அத்துடன் ஜியோவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஏர்டெல் நிறுவனமும் கட்டணங்களை தாறுமாறாக குறைத்து வருகிறது.     இதனால் பல நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வோடோபோன் மற்றும் ஐடியா தொலை தொடர்பு நிறுவனம் இதனால் பெரும் வர்த்தக சரிவை சந்தித்துள்ளது.   இந்த நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.   இதை ஈடு கட்ட இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட முடிவு எடுத்தன.

இணைப்புக்கு அனுமதி கோரி இரு நிறுவனங்களும் மத்திய தொலை தொடர்புத்துறைக்கு விண்ணப்பம் அளித்தனர்,   இதற்கு தொலை தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இன்று அனுமதி அளித்துள்ளார்.   ஸ்பெக்ட்ரம் விதிகளின் படி ஐடியா நிறுவனம் தனது வங்கி இருப்புத் தொகை ரூ.2100 கோடி உள்ளதற்கான ஆதாரங்களை தொலை தொடர்புத் துறை கேட்டுள்ளது.

இந்த ஆதாரம் விரைவில் அளிக்கப்படும் என நிறுவனங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.    இவ்விரு நிறுவனங்களும் இணைந்தால்  இரு நிறுவனங்களும் இணைந்து சுமார் 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைந்த இந்த நிறுவனம் வோடபோன் ஐடியா லிமிடெட் என  பெயரிடப்பட உள்ளது.