டில்லி,

ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை எதிர்த்து வோடபோன் நிறுவனம் டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து மார்ச் 31வரை இலவச சேவையை வழங்கி வந்தது. இதன் காரணமாக ஜியோவுக்கு வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

ரிலையன்ஸ் ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் அதிபர் முகேஷ் அம்பானி கூறியிருந்தார். தாங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் இலவச இணைய சேவை சலுகைகளும், இலவச தொலைபேசி அழைப்பு சேவையும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார்.

இந்நிலையில், ஒரு மாதத்திற்குள் 99 ரூபாய் கட்டி, ரிலையன்ஸ் பிரைம் மெம்பர்ஷிப் உறுப்பின ரானால், 303 ரூபாய்க்கு ஒரு மாதம் முழுவதும் வாய்ஸ் கால் இலவசம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா என்றும் அறிவித்தது.

ஆனால், இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால், பிரைம் மெம்பர்ஷிப் சலுகையை மேலும் 15நாள் நீடித்தது. இதற்கு மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், டிராய் இந்த சலுகையை உடடினயாக திரும்ப பெற ஜியோவுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், வோடபோன் நிறுவனம்,  ரிலையன்ஸ் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை தொடர்வதாகவும், அதை உடனே கைவிடக் கோரியும், அதுகுறித்த விளம்பரங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  டிராயிடம் மீண்டும் புகார் மனு அளித்துள்ளது.