‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’: இன்று கமலின் அனைத்துக்கட்சி கூட்டம்….

--

சென்னை:

‘காவிரிக்கான தமிழகத்தின்  குரல்’ என்பது குறித்து பேச மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதையொட்டி இன்று அவர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில், திமுக, கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் என பெரும்பாலான கட்சிகள் கலந்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளன. இதன் காரணமாக கமலின் முயற்சி வெற்றிபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

‘காவிரியில், தமிழகத்துக்கான குரல்’ என்ற தலைப்பில், மக்கள் நீதி மையத்தின் சார்பில் இன்று (மே 19) சென்னை, பெரியமேட்டில் உள்ள ஓட்டலில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கமல் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும்,  நடிகர் ரஜினி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், த.மா.கா., தலைவர் வாசன் உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், ‘இந்தக் கூட்டத்தில், நல்லகண்ணு பங்கேற்க வாய்ப்பில்லை’ என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்து விட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும், ‘நாங்கள் பங்கேற்க மாட்டோம்’ என்றது.ஸ்டாலின் கூறுகையில், ”தி.மு.க., உள்ளிட்ட, ஒன்பது கட்சிகளும் பங்கேற்க வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம்,” என்றார்.

இந்நிலையில், கமலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில்  அரசியல் கட்சியினர் பங்குபெறுவார்களா அல்லது விவசாய அமைப்புகள் மட்டுமே பங்குபெறுமா என்பது  இன்று தெரிய வரும். புது அணியை உருவாக்கி அதற்கு தலைமையேற்ற நினைத்த கமல் எண்ணம் நிறைவேறுமா… பொறுத்திருந்து பார்க்கலாம்…