டில்லி:

ம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்திதற்கு பிறகு தற்போதுதான் தனது கருத்தை தெரிவித்து உள்ளார் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்.

அந்த மாநில மக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ள நிலையில் காங்கிரஸ் உள்பட ஒருசில கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காஷ்மீர் விவகாரம் நாடு முழுவதும் பல்வேறு கருத்துக்களை எதிரொலித்து வரும் நிலையில்,  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முதன் முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முன்னாள் மத்தியஅமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டியின் நினைவுநாள் கூட்டத்தில் கலந்துகொண்ட  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அப்போது, இந்தியா ஒரு “ஆழ்ந்த நெருக்கடியை” கடந்து வருவதாகவும் அதற்கு ஒத்த எண்ணம் கொண்டவர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் மன்மோகன் சிங் கூறினார்.  காஷ்மீரில் நிலவும் நெருக்கடி தனக்கு கவலை தருவதாகவும், “ 370-வது பிரிவின் விதிகளை அகற்றிய மத்திய அரசின் முடிவு, நாட்டில் பலரின் விருப்பத்திற்கும்  பொருந்தாது என்று தெரிவித்தவர், இந்த விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் அனைவரின் குரல்களும் கேட்கப்படுவது முக்கியம். நமது குரலை உயர்த்துவதன் மூலம் புனிதமான இந்தியா என்ற யோசனை மேலோங்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கூறினார்.