ஜப்பானில் எரிமலை வெடித்து சிதறியது! ….ராணுவ வீரர் பலி

டோக்கியோ:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 120 மைல் தூரத்தில் பனிச்சருக்கு மற்றும் சூடான நீரூற்று க்கள் அடங்கிய குசத்சு-ஷிரனே மலைப் பகுதி உள்ளது. இன்று காலை 10 மணியளவில் இங்குள்ள எரிமலை ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் பாறைகள் அந்த பகுதியை சுற்றிலும் சிதறின. இதனால் பனிப் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் சிக்கி ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

எரிமலை வெடித்து சிதறிய காட்சியை அங்கு சுற்றுலா சென்றவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அங்குள்ள வான்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழப்பட்டிருந்ததையும், காற்றில் பரவி கற்கள் மழை போல் பொழிவதையும் பார்க்க முடிந்தது.

அந்த பகுதி சுற்றுலா பகுதி என்பதால் அங்கு மலைகளுக்கு இடையே ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. பாறைகள் சிதறி ரோப் காரில் இருந்த சுற்றுலா பயணிகளை தாக்கியது. இதில் 4 பேர் காயமடைந்தனர். இதை தொடர்ந்து ரோப் கார்கள் அனைத்தும் அந்தரத்திலேயே நின்றுவிட்டது. இதனால் 40 நிமிடங்கள் வரை 80 சுற்றுலா பயணிகள் ரோப் கார்களில் சிக்கி தவித்தனர். மின்சார சப்ளையும் தடைபட் டுவிட்டது. ரோப்கார்களில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமும், அவசர கால பணியாளர்கள் மூலமும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

வெடித்து சிதறிய பாறைகள் மலை ஏற்ற வீரர்கள், பனிச் சறுக்கு வீரர்கள் தங்கியிருந்த ஓய்வு விடுதிகளின் மேற்கூரைகளை சேதப்படுத்தி விட்டது. மலை வெடித்து சிதறி 30 நிமிடங்கள் கழித்து பனிச் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த 6 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். 49 வயதான வீரர் ஒருவர் இதில் சிக்கி இறந்துவிட்டார். 2 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் எரிமலை வெடிப்பது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை ஒன்றில் இருந்து 3ம் நிலைக்கு உயர்த்தியுள்ளது. ஒரு மைல் தூரத்திற்கு மக்கள் யாரும் வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் 5ம் நிலை பிரகடனப்படுத்தினால் உடனடியாக அந்த பகுதியை விட்டு வெளியே வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி