முதியோர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலியுடன் தன்னார்வலர் நியமனம்! சத்தியபிரதா சாஹு

--

சென்னை:

வாக்குப்பதிவின்போது, முதியோர்கள் வாக்களிக்கும் வகையில்  தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு சக்கர நாற்காலியும், அதனுடன் தன்னார்வலர் ஒருவரும் நியமனம் செய்யப்படுவர் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.

இதற்காக 67 ஆயிரத்து 720  தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் கூறி உள்ளார்.

தமிழகத்தில் வரும் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கு தேவையான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, தேர்தல் பணி குறித்து பயிற்சி வகுப்புகள் நடை பெற்றன. அதில், அவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கும் வகை செய்யப்பட்டிருந்தது. இதில் பல குளறுபடிகள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள  அரசு ஊழியர், ஆசிரியர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 903 பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டு எள்ளன. அவர்களில் 47 ஆயிரத்து 610 பேரிடம் இருந்து வாக்களிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் 67 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு சர்வீஸ் ஓட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார்.

அதுபோல, தேர்தல் பணியில் இருக்கும்போது ஊழியர் யாருக்காவது மரணம் நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும்.

தேர்தல் பணி காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து கொலை செய்யப்பட்டுவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். இந்த தொகையை மத்திய அரசு அளிக்கும் என்று கூறினார்.

இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இந்த வாக்குசாவடிகள் அனைத்திலும்,  முதியோர்கள் வாக்களிக்கும் வகையில் ஒரு சக்கர நாற்காலி வைக்கப்பட்டு இருக்கும். அதை இயக்குவதற்கு ரூ.250 சம்பளத்தில் தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.