சென்னை: சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1 மணி நிலவரப்படி 39.61%வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றுமின்றி, திரையுலகினரும் தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,   நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்று தெரிவித்தார்.

விஜய் சேதுபதி, ஏற்கனவே,  கல்லூரி விழா ஒன்றில் பேசியபோது,  “வாக்கு செலுத்துவது மிகவும் முக்கியம். எப்போதுமே நமது ஊருக்கு ஒரு பிரச்னை, கல்லூரிக்கு ஒரு பிரச்னை, நம் மாநிலத்துக்கு ஒரு பிரச்னை என்று அழைப்பவர்களுடன் சேருங்கள். நம் சாதிக்கு ஒரு பிரச்னை, மதத்துக்கு ஒரு பிரச்னை என்று பேசுபவர்களுடன் சேராதீர்கள். அப்படி சொல்பவர்கள் நம்மைத் தூண்டி விட்டு போலீஸ் பாதுகாப்புடன் வீட்டில் இருப்பார்கள். நாம் தான் சிக்கிக் கொள்வோம். புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  தனக்கு எப்போதும் அதே நிலைப்பாடுதான் என்றும் மனிதன் தான் தனக்கு முக்கியம் என்றும் கூறினார்.