டில்லி:

வாக்கு எண்ணிக்கையின்போது, விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் 21 எதிர்கட்சிகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் மகக்ளவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. இந்த வாக்குப்பதிவின்போது ஏராளமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவின்போது சலசலப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே  வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வாக்குப்பதிவின்போது,  ஒப்புகைச் சீட்டில் பதிவாகும் வாக்குகளையும்,  மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் 50 விழுக்காடு வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என  திமுக , காங்கிரஸ், தெலுங்கு தேசம், உள்பட  21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்தன.

விசாரணையின்போது, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், விவிபாட்டில் உள்ள  வாக்குககளை ஒப்பிட்டு எண்ண முடியாது, அதற்கு மேலும் பல நாட்கள் பிடிக்கும் என்று வாதிட்டது. அதைத்தொடர்ந்து , ஒரு மக்களவை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையத் துக்கு உச்சநீதி மன்றம்  உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் வாக்குப்பதிவின்போது, தொடர்ந்து மின்னணி வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில்,  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகை சீட்டுடன் ஒப்பிட்டு வாக்குகணை எண்ண வேண்டும் என்று  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி 21 எதிர்கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.