தூத்துக்குடி:

துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற வைகோ கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவும் இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முதல் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.

நேற்று தனது பிரசார பயணத்தை தொடங்கிய வைகோ,  ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், முக்காணி  பகுதிகளில்  திறந்த வேனில் சென்று கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பின்னர் இரவு  தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, தமிழர்கள்  உரிமைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த கலைஞரின் மகள் கனிமொழி என்றவர்,  இன்றைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர். நாளைய தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்றார்.

கனிமொழியின்  அன்பும், பரிவும், கனிவும், பாசமும், மனிதாபிமானமும் கொண்ட அணுகுமுறை யால், சாதி, மதம், கட்சி கடந்து ஒடுக்கப்பட்டவர்களுக்காக, மீனவர்களுக்காக, விவசாயிகளுக்காக, வேலையில்லா திண்டாட்டத்தால் வாடி வதங்கும் இளைஞர்களுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுத்து உள்ளார்.

பாசிசமா, ஜனநாயகமா என்பதற்காகத்தான் இந்த தேர்தல். ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றியை தாருங்கள். கட்சி பார்க்காமல், சாதி பார்க்காமல், துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க, இந்த தொகுதிக்கு என்ன தேவை என்று திட்டமிட்டு செயலாற்றக்கூடிய கனிமொழியை வெற்றி பெறச் செய்யுங்கள். ந்தப்பட்ட ரத்தத்துக்காக, நீதிக்காக வாக்குகளை திரட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.