சென்னை:

வாக்காளர் பட்டியல் மற்றும் வோட்டர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்த ஏதுவாக தேர்தல் ஆணையம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.  இதன் மூலம்  பொதுமக்கள், தங்களது பெயர் மற்றும் முகவரி மற்றும் பிழைகளை  தாங்களே திருத்தம் செய்துகொள்ளலாம்.

இந்த செயலி, செப்டம்பர் 1ந்தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

voter helpline mobile app  என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மொபைல் செயலியை (app) நேற்று அறிமுகப்படுத்தி உள்ளது. இதை வாக்காளர்கள் தங்களது மொபைலில் உள்ள Google play store-ல் இருந்து  பதிவிறக்கம் செய்து, அதன் மூலம்,  வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர், பிறந்த தேதி, முகவரி,புகைப்படம், பாலினம் ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.

திருத்தம் செய்யப்பட்ட விவரங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ள ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மட்டும் 1950 என்ற இலவச அழைப்பு எண் மூலமும், வாக்காளர் உதவி மையம், வாக்காளர் பதிவு அலுவலகம், இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலமும், அந்தந்த வாக்குச் சாவடிகளில் நவம்பர் 2, 3, 9, 10 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்கள் மூலமும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களை தாங்களே திருத்தம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது