மும்பை

பிரியங்கா காந்தியை வாக்காளர்கள் இந்திரா காந்தியாக காண்பதால் காங்கிரஸ் நல்ல பலனடையும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.   இதில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவில்லை.    காங்கிரஸ் கட்சி ஏற்கனவே உத்திரப் பிரதேச மாநிலத்தில் தங்கள் கட்சி வலுவுடன் உள்ளதாக தெரிவித்திருந்தது.    அத்துடன் மேலும் வலு சேர்க்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக பிரியங்கா காந்தி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அவருக்கு உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இது குறித்து பாஜகவின் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே, “பிரியங்காவின் முழு நேர அரசியல் பிரவேசம் வரவேற்க தக்கது.   மக்களுக்கு அவருடைய தோற்றம் மிகவும் பிடிக்கும் என தோன்றுகிறது.   உத்திரப் பிரதேச வாக்காளர்கள் பிரியங்காவின் உருவில் மறைந்த இந்திரா காந்தியை காண்பார்கள்.

பிரியங்காவுக்கு அவருடைய பாட்டி இந்திரா காந்தியின் தோற்றமும் குணங்களும் ஒருங்கே அமைந்துள்ளது.   இது வாக்காளர்கள் இடையே நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.   அந்த தாக்கம் காங்கிரஸ் கட்சிக்கு பலன் அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

தேசிய வாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், “உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சாமஜ் கட்சிக் கூட்டணிக்கு யாதவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்கள் வாக்கு அதிகம் உள்ளதால் பிரியங்காவின் பிரவேசம் பாதிப்பை ஏற்படாது.,

ஆனால் காங்கிரஸ் தொண்டர்களிடையே பிரியங்காவின் அரசியல் பிரவேசம் நல்ல ஊக்கம் அளிக்கும்.   அதனால் அவர்கள் மேலும் கடின உழைப்பை மேற்கொள்வார்கள்.   ஆகவே கடந்த 2009 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலைப் போல் இப்போதும் உ. பி. யில் காங்கிரசுக்கு குறைந்தது 21 இடங்களில் வெற்றி கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.