சென்னை: தமிழக தலைநகரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்ல முறையான பேருந்து வசதிகள் அரசால் செய்து கொடுக்கப்படவில்லை என்றாலும், நேற்று இரவில், வாக்களிப்பதற்காக, தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் அலைஅலையாய் புறப்பட்டுச் சென்றது தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பொதுவாகவே, அதிகளவிலான மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டும்போது, தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றங்கள் இருப்பது இயல்புதான்.

இந்த 2019 தேர்தலில், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து தலைநகர் சென்னையில் பணிசெய்யும் பல லட்சக்கணக்கான மக்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் முண்டியடித்துக் கொண்டு தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.

தமிழக அரசு முறையான போக்குவரத்து வசதிகளை செய்துதராத சூழலில், பேருந்துகளின் கூரை மீதெல்லாம் அமர்ந்துகொண்டு ஆபத்தான பயணம் செய்தனர் மக்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளின் மீதான அதிருப்தியை தங்களின் வாக்குகளின் மூலமாக வெளிப்படுத்தவே இப்படியான பயணம் என்று பல அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் மீதான ஆர்வமும் இவர்களுக்கு இருக்கலாம் என்று நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

– மதுரை மாயாண்டி