பெங்களூர்:

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒருசில இடங்களில் சிறுசிறு சலசலப்புக்கு இடையில் எந்தவித தடையுமின்றி இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. சுமார் 70 சதவிகிதம் வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதில் பெரும்பலான கருத்துக்கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்து உள்ளன.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை. இந்த நிலையில், ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் எந்த கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், ஆட்சி அமைப்பதில் மதசார்பற்ற ஜனதாதளம் முக்கிய பங்கு வகிக்கும், குமாரசாமி கிக் மேக்கராக இருப்பார் என்று கணிப்புகள் வெளியிட்டிருந்த நிலையில், தற்போதைய எக்சிட் போல் கருத்துக்கணிப்பும் அதையே உறுதி செய்வதுபோல உள்ளது.

பிரபல நிறுவனமான சி வோட்டர் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்…

இந்த நிறுவனம் நடத்திய எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தொங்கு சட்டசபையே அமையும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்நிறுவனம் சார்பில் இன்று தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளிலும் கருத்து கணிப்பு நடத்தியதில்,  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 93 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சிக்கு 25 இடங்களிலும் , மற்றவை ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில்  தொங்கு சட்டசபை ஏற்படும் என்றும், ஜேடிஎஸ் கட்சி எந்த கட்சிக்கு ஆதரவு தருகிறதோ அந்த கட்சியே ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

அதுபோல பிரபல பத்திரிகைகளான இந்தியா டுடே ஆக்ஸிஸ், டைம்ஸ் நவ் விஎம்ஆர், திக்விஜயா டிவி, ஏபிபி,  நியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ், நியூஸ் நேஷன் மற்றும் ஜான் கி பாத் ஆகிய நிறுவனங்களின் கருத்து கணிப்புகளும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி உள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விஎம்ஆர் அமைப்புடன் இணைந்து நடத்திய எக்சிட் போல் கருத்துக்கணிப்பில்   காங்கிரஸ் 90-103 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. பாஜக 80-93 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்  ஜேடிஎஸ் 31-39 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும்,  சுயேட்சைகள் 2-4 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

இதிலும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடையாது என்றே கூறி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றியை தேசிய கட்சிகள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்,  கருத்துக்கணிப்புகள் அனைத்தும், கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்றே தெரிவித்துள்ளன. குமாரசாமி கிங் மேக்கராக இருப்பார் என்றும், இதன் காரணமாக குதிரை பேரத்துக்கு வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இருந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 15ந்தேதி 12 மணிக்குள் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப்போது யார் என்பது ஓரளவு தெரிந்துவிடும்… அதுவரை நாமும் காத்திருப்போம்…

கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ள விவரம்:

இந்தியா டுடே :  பா.ஜ. – 79 – 92 இடங்கள். காங்கிரஸ் – 106-118 இடங்கள்

ரிபப்ளிக் டிவி : பா.ஜ. – 95 – 114 இடங்கள் காங்கிரஸ் – 73- 82 இடங்கள்

சிஎன்என் : பா.ஜ.  – 79 -82 இடங்கள் காங்கிரஸ் – 106-118 இடங்கள்

என்டிடிவி :  பா.ஜ., – 80 -93 இடங்கள்  காங்கிரஸ் – 106-118 இடங்கள்

டைம்ஸ் நவ்:  காங்கிரஸ் 90-103 இடங்கள் பா.ஜ. – 80-93 இடங்கள்

ஏபிபி: பா.ஜ., 101- 103 இடங்கள்  காங்கிரஸ் – 82-94 இடங்கள்

ஆஜ்தக்: பா.ஜ., 79-92 இடங்கள்   காங்கிரஸ் – 106-118 இடங்கள்

நியூஸ் நேசன்: காங்கிரஸ் 97 இடங்கள்  பா.ஜ. – 87 இடங்கள்

சிஎன்எக்ஸ்: பா.ஜ. – 102-110 இடங்கள் காங்கிரஸ் – 72-78 இடங்கள்

சி-வோட்டர்: பா.ஜ., 97-109 இடங்கள் காங்கிரஸ் – 87-99 இடங்கள்

ஜன் கி பாத்: பா.ஜ., – 95-114 இடங்கள் காங்கிரஸ் – 73-82 இடங்கள்