நியூயார்க்

டிரம்ப் வழக்கறிஞர்கள் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் மீது வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர் 270 கோடி டாலர் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் பல மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரித்த ஸ்மார்ட்மேடிக் என்னும் நிறுவனம் தனது இயந்திரங்களில் முறைகேடு செய்ததால் டிர்மப் தோல்வி அடைந்ததாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால் நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரித்த பிறகு அனைத்து வழக்குகளையும் நிராகரித்தது.  அத்துடன் இந்த வழக்குகளில் கூறப்படுவது போல் வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூலம் முடிவுகளை மாற்றி அமைக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.  இதனால் டிரம்ப் வழக்கறிஞர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகமும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றம் சாட்டியது.  அந்த ஊடகத்தின் வெளியிட்ட 13 தொகுப்புக்களில் ஸ்மார்ட்மேடிக் நிறுவனம் அமெரிக்கத் தேர்தலை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ளதாக தெரிவித்தது  மேலும் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்படுத்தியது இந்த இயந்திரங்களின் செயல்பாடுகளால் எனவும் இந்த தொகுப்புக்களில் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஸ்மார்ட்மேடிக் நிறுவன உரிமையாளர் நியூயார்க் நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.  அந்த வழக்கு மனுவில் 270 கோடி டாலர் இழப்பீடு கோரி டிர்மப்பின் வழக்கறிஞர்கள் ரூபி கிலானி, சிட்னி போவெல் மீதும் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்தை சேர்ந்த ரூபர்ட் மர்ட்ரோச்,, மரியா பார்டிட்ரோமோ, லோவ் டோப்ஸ் மற்றும் ஜீனைன் பிரைரோ ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.