இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் வாக்குரிமை ரத்து : பாபா ராம்தேவ் யோசனை

ரித்வார்

யோகா குரு பாபா ராம்தேவ் ஒரு தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ் பதஞ்சலி தொழில் நிறுவனத்தின் அதிபர் ஆவார். இவர் நடத்தும் பதஞ்சலி பல்கலைக் கழகம் மற்றும் உத்தரகாண்ட் அரசின் மேல்படிப்புத் துறை இணைந்து ஞான கும்பம் என்னும் விழா ஒன்றை நிகழ்த்தியது. இந்த விழாவை சனிக்கிழமை அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் பேசிய பாபா ராம்தேவ், “ஞான கும்பம் நிகழ்வின் மூலம் அனைத்து துறைகளிலும் நாடு தனது அறிவை வளர்த்துக் கொள முடியும். யோகாவில் சாதனை செய்தது போல தற்போது கல்வித் துறையிலும் சாதனை நிகழ்த்த எண்ணி உள்ளோம். இதன் மூலம் இந்தியர்களின் அறிவுத் திறனை உலகம் முழுவதும் அறிய செய்ய உறுதி கொண்டுள்ளோம்.

தற்போது நாட்டில் உள்ள மிக முக்கிய பிரச்னை மக்கட்தொகை அதிகரிப்பு ஆகும். தற்போது மக்கள் தொகை பல கோடிகளை தாண்டி உள்ளது. அதனால் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுப்போர் குறித்து அதிக கவனம் கொள்ள வேண்டும்.

இனிமேல் இரு குழந்தைகளுக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு வாக்குரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் மக்கட் தொகை அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகளை அனைவரும் அறியச் செய்ய வேண்டும்.

நான் தனி ஆள். எனக்கு திருமணம், குழந்தைகள் எதுவும் இல்லை. அதனால் தான் மகிழ்வுடன் இருக்கிறேன். பதஞ்சலில் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்” எனக் கூறி உள்ளார்.