விராத் கோலி செய்த அந்த தவறு – லட்சுமண் சுட்டுவது எதை?

ஐதராபாத்: நியூசிலாந்திற்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில், கேப்டன் விராத் கோலி செய்த தவறால்தான், நியூசிலாந்து அணி 348 ரன்களைக் குவித்தது என்றுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணி 165 ரன்களுக்கே தன் முதல் இன்னிங்ஸை முடித்த நிலையில், பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 225 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அப்போது புதிய பந்து எடுக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில், புதிய பந்து என்பது மிகவும் முக்கியமானது. புதிய பந்து கிடைத்தவுடன், கேப்டன் கோலி அதை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிடம் கொடுத்தார்.

உலகத்தரம் வாய்ந்த 3 வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இருக்கையில், புதியப் பந்தை சுழற்பந்து வீச்சாளரிடம் கொடுத்தது தவறு. டெயிலெண்டர்களைப் பொறுத்தவரை, அவர்களை வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து சமாளிப்பதுதான் சிறந்த உத்தியாகும்.

நியூசிலாந்தின் டெயிலென்டர்கள்தான் அந்த அணியின் எண்ணிக்கையை 348 என்ற நிலைக்கு எடுத்துச்சென்று விட்டனர். அந்த அதிகபட்சம் 100 ரன்கள் மட்டுமே முன்னிலை பெறும் என்று நாங்கள் நினைத்திருந்தோம்.

ஆனால், கோலியின் தவறான முடிவால், இந்தப் போட்டியை இந்திய அணி இழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்றுள்ளார் லட்சுமண்.