Random image

வியாபம் தேர்வு ஊழல் : மத்திய பிரதேச முதல்வர் மீது காங்கிரஸ் புகார்

போபால்

வியாபம் தேர்வு ஊழல் வழக்கில் மின்னணு ஆதாரங்களை அழித்ததாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மத்திய அமைச்சர் உமாபாரதி உள்ளிட்டோர் மீது காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் புகார் கூறி உள்ளார்.

மத்தியப் பிரதேச தொழில் துறை தேர்வு ஆணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.  அதை ஒட்டி பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டனர்  பலர் கைது செய்யப்பட்டனர்.   இந்த விவகாரம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கு தற்போது நீதிபதி சுரேஷ் சிங் தலைமையில் ஆன சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.   இந்நிலையில் முன்னாள் ம. பி முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் தனது வழக்கறிஞர் மூலம் சிறப்பு நீதிமன்றத்தில் 27000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் இண்ட வழக்கு சம்பந்தப் பட்ட மின்னணு ஆவணங்களை அழித்ததாக ம. பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மத்திய அமைச்சர் உமாபாரதி, காவல்துறை ஐஜி விபின் மகேஸ்வரி, காவல்துறை சூப்பிரண்ட் திலிப் சோனி ஆகியோர் மீது திக் விஜய் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.    ஆகையால் முதல்வர் மற்றும் உமா பாரதியை அழைத்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புகார் மனு மீதான விசாரணை வரும் 22 ஆம் தேதி நடக்கும் என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.