வியாபம் ஊழல்: மருத்துவ கல்லூரி அதிபர்கள் முன்ஜாமின் மனு தள்ளுபடி

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் ஊழல் வழக்கில் முக்கிய தனியார் மருத்துவ கல்லூரிகளின் அதிபர்களின் முன் ஜாமின் வழங்க மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்த வழக்கில் சிராயு மருத்துவ கல்லூரி, எல்என் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை குற்றப்பத்திரிக்கையில் கடந்த மாதம் சிபிஐ சேர்த்தது.

இதைத் தொடர்ந்து சிராயு கல்லூரியின் அஜய் கோயங்கா, எல்என் கல்லூரியின் சத்பாதி மற்றும் நாராயண் ஆகியோர் முன்ஜாமின் கோரி மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மன தாக்கல் செய்தனர். இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.

இது தவிர இண்டக்ஸ் கல்லூரி மற்றும் மக்கள் மருத்துவ கல்லூரி உரிமையாளர்கள் பெயர்கள் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள போதும் அவர்கள் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடவில்லை.

முன்ஜாமின் மனு விசாரணையின் போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘சிறந்த மாணவர்கள் பலரை இக்கல்லூரிகள் சேர்க்காமல் அனுமதி மறுத்துள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாணவர்களின் வாழ்க்கையோடு இவர்கள் விளையாடியிருப்பது வெளிச்சத்துக்கு வரும். பல மாணவர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக கொலை செய்த வழக்கு இது’’ என்று தெரிவித்தனர்.