வியாபம் ஊழல்: 490 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை!

போபால்,

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய பிரதேச வியாபம் ஊழல் தொடர்பாக 490 பேர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜ தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். இங்கு கடந்த 2015ம் ஆண்டு  பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் நடைபெற்றதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது.

நுழைவு தேர்வுகளை நடத்தி வரும்மா நில தேர்வு வாரியமான வியாபம் நடத்தி வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மத்திய பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மத்தியப்பிரதேச அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையில்,  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி, வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய 490 பேர் மீது போபால் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது  வியாபம் வழக்கு.