மும்பை: இந்தியாவின் போதை மருந்து சோதனை ஆய்வகமான என்டிடில்(NDTL) அமைப்பின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு தடைசெய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச போதை தடுப்பு ஏஜென்சியான WADA.

ஆய்வகங்களுக்கான சர்வதேச இயங்கு விதிமுறைகளை சரியாக அனுசரிக்காத காரணத்தாலேயே இந்த தடை விதிக்கப்படுவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடையுத்தரவு ஆகஸ்ட் 20ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது. இதன்மூலம், அத்தேதியிலிருந்து அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவிதமான போதை தடுப்பு நடவடிக்கைகளிலும் (அதாவது, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளில்) என்டிடிஎல் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

WADA தரப்பிலிருந்து என்டிடிஎல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, குறைபாடுகள் கண்டறியப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம் இந்திய விளையாட்டுத் துறைக்கு தேவையற்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இனிமேல், இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பரிசோதனை மாதிரிகளை, ஏதேனும் வெளிநாட்டிலுள்ள மற்றொரு WADA அங்கீகாரம் பெற்ற ஏஜென்சிக்கு அனுப்பிதான் சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.