ஊதிய முரண்பாடு: சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு 7ந்தேதி அறிக்கை தாக்கல்?

சென்னை:

மிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட சித்திக் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை ஜனவரி 7ம் தேதி முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமியிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கடந்த ஓராண்டுக்கும் மேலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான  ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ‘கடுமையான நிதி நிலை நிலவி வரும் போதும், அரசு பணியாளர் ஊதிய திருத்தங்கள் தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பரிசீலிக்க, அரசு, ஒரு குழுவை அமைக்கும்’ என அறிவித்தார்.

அதன்படி, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர், சித்திக் தலைமையில், கடந்த  பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த குழு, ஏற்கனவே பல சங்க நிர்வாகிகளை அழைத்து கருத்துக்களை கேட்டறிந்து வந்தது. இந்த குழு விரைவில் தமிழக முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் மேலும் கால அவகாசம் கூறியது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தற்போதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஜனவரி 7ந்தேதி  சித்திக் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்தே ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் ஓரிரு மாதங்களில் களைய வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.