வாஷிங்டன்

மேற்கத்திய நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க வகாபிசம் என்னும் இஸ்லாமிய தீவிர வாதம் பரப்பபட்டதாக  சௌதி அரேபிய இளவரசர் தெரிவித்துள்ளார்.

சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்தார்.   தனது சுற்றுப்பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் உட்பல பல தலைவர்களை சந்தித்தார்.   அத்துடன் அமெரிக்க ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்துள்ளார்.   அவ்வாறு அமெரிக்க தினசரியான வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கடந்த 22 ஆம் தேதி அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது முகமது பின் சல்மான், “முன்பு மேற்கத்திய நாடுகளுக்கும் அப்போதைய சோவியத் யூனியன் (ரஷ்யா) நாட்டுக்கும் இடையில் பனிப் போர் இருந்தது.   மேற்கத்திய நாடுகள் சோவியத் யூனியன் இஸ்லாமிய நாடுகளுடன் நட்புறவு கொள்வதையும்,  அந்நாடுகளில் கம்யூனிசம் பரவுவதையும் விரும்பவில்லை.

அதனால் சௌதி அரேபியாவில் வகாபிசம் என்னும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரப்புமாறு மேற்கத்திய நாடுகள் கேட்டுக்கொண்டன.

அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்போது வாகாபிசம் பரப்பப்பட்டது.   தற்போது அந்த முயற்சிகள் யாவும் முறியடிக்கப் பட்டு விட்டது.    இது போல செயல்களுக்கு சௌதியை சேர்ந்த சில நிறுவனங்கள் நிதி உதவி அளித்தன.   ஆனால் அரசு எப்போதும் இந்த செய்ல்களை ஆதரிக்கவில்லை”  என தெரிவித்துள்ளார்.