சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு குறைந்த இடங்களே ஒதுக்க முடியும் என கூறப்பட்டுள்ளதால்,  அடுத்தகட்டநடவடிக்கை எடுப்பதுகுறித்து முடிவு செய்ய கட்சி நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு தேமுதிக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு   23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக, தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக  தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது தேமுதிகவிற்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முடியும் என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்க தேமுக தலைமை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, தேமுதிகவுக்கு 41 சீட் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பிரேமலதாவின், அதிமுகவின்  வெறும் 12 இடங்களை மட்டுமே தர முடியும் என்பதை கேட்டு கொந்தளித்து விட்டாராம்.   குறைந்த பட்சம் 20 தொகுதிகளாக ஒதுக்குங்கள் என கோரப்பட்டதாகவும், ஆனால், அதிமுக தலைமை அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேமுமுக நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், அதிமுக கூட்டணியில்  தொடரலாமா? விலகலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே தேமுதிக தரப்பில் இருந்து, சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடுன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதில் எந்த கூட்டணியில் அதிக இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அந்த கூட்டணியில் இணைய தேமுதிக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை வீசி, அங்கிருந்து விலகவும் தீர்மானித்துளளதாக கோயம்பேடு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.