‘‘உலகம் சுற்றும் பெண்மணி’’ : இது சினிமா அல்ல நிஜம்

வாஷிங்டன்:

தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எம்.ஜி.ஆருக்கு போட்டியாக ‘யாரோ’ ஒரு பெண் ‘‘உலகம் சுற்றும் பெண்மணி’’ என சினிமாவில் நடிக்கிறார் என்று நினைத்து விட வேண்டாம்.. இது வேறு கதை

ஊக்குவிப்பதன் மூலம் பலர் முன்னேறுவார்கள். சிலர் தங்களது கனவை கடின உழைப்பு மூலம் நிறைவேற்றுவார்கள். சிலர் பள்ளி பருவத்தில் சவால் விடுவார்கள்..ஆனால் அதன் பிறகு அதை செய்ய மாட்டார்கள்.

நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். கனவும், கடின உழைப்பும் வெற்றிக்கான பாதி போராட்டமாகும். இது ஒரு குறிப்பிட்ட நாள் வரை தொடர வேணடும். சிலர் இந்த நம்பிக்கையை பாதியிலேயே விட்டுவிடுவார்கள். சிலர் பாதுகாப்பாக இருப்பதையே விரும்புவார்கள்.

இப்படி பல தரபட்ட மனிதர்கள் வாழும் இந்த உலகில்…. ஒரு பெண் தனது வாழ்க்கை வெளியில் தெரியாமல் போவதை விரும்பாமால், வெளியில் தெரியும் வகையில் ஊர் அல்ல உலகம் சுற்ற கிளம்பியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் புறநகர் பகுதியை சேர்ந்தவர் கெஸி டிபெகோல். இவரது கல்வி கடல் போல் பெரிது. வீட்டு பள்ளி, முன்னணி தனியார் பள்ளி, பின்னர் முதுநிலை இடைநிலை பள்ளி கல்வியை முன்னணி பல்கலைக்கழகங்களான லாங் ஐலேண்ட் பல்கலை, கோஸ்டா ரிகா குலோபள் கல்லூரி, கிரீன் மவுன்டெயின் கல்லூரி, முதுநிலை பல்லைக்கழக கல்வியை சாந்தா பார்பரா நகர கல்லூரி, கலிலியோ டிராவல் கல்லூரி ஆகிவற்றில் பயின்றுள்ளார்.

இவர் தனது 25வது வயதில் மூன்றரை ஆண்டு பல்கலைக்கழக படிப்பை முடித்தார். இது அவருக்கு திருப்தியை அளிக்கவில்லை. ஓய்வையும் விரும்பவில்லை. வாழும் வாழ்க்கையை கல்வி மட்டும் முழுமை அடைய செய்யாது என்பதை உணர்ந்தார். சிறு வயது முதலே இவர் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

இதன் பின்னர் தான் ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டார். கடந்த 2009ம் ஆண்டு தனது சகோதரனுடன் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பெல்ஜியம், நெதர்லாண்ட், கிளெச் குடியரசு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்துக்கு சென்றார்.
ஐரோப்பா பயணத்துக்கு பின் அவரது சகோதரர் வீடு திரும்பி விட்டார். ஆனால், கெஸி தனது முடிவை மாற்றிக் கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டும் என்ற உறுதியோடு தனது பயணத்தை தனி ஆளாக மேற்கொண்டு வருகிறார்.

எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் என்ற திரைப்படம் மிகவும் புகழ்பெற்றது. அவர் சினிமாவில் தான் உலகத்தை சுற்றி வந்தார். ஆனால் இந்த பெண் நிஜத்திலேயே உலகத்தை சுற்றி வருகிறார்

. உலக நாடுகளை அனைத்தையும் சுற்றி வந்த முதல் பெண் என்ற பெருமையை பெற வேண்டும் என்று லட்சியத்துடன் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.. நாமும் வாழ்த்துவோம்.