சென்னை:

திமுகவுடன் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா? என்பதுகுறித்து, நாளை மாலைக்குள் முடிவை தெரிவிக்கும்படி அதிமுக கெடு விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணி அமைத்து, வேட்பாளர் நேர்காணலை தொடங்கி உள்ள நிலையில், அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது.

தேமுதிகவை தங்களுக்கு அணிக்கு இழுக்க முயற்சி மேற்கொண்ட நிலையில், தேமுதிகவின் இரட்டை வேடம் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே அதிமுக அணியில், பாஜக, பாமக, , புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. அதன்படி,  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில்,  பா.ம.க.வுக்கு 7, பா.ஜனதாவுக்கு 5, புதிய நீதி கட்சிக்கு -1, புதிய தமிழகம் கட்சிக்கு-1, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு-1 என 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள 25 தொகுதியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், தமாகாவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்க முடிவு செய்துள்ளது.

ஆனால், தேமுதிக அதிக தொகுதிகளை கேட்டு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதன் காரணமாக இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில் பிரேமலதாவின் பேட்டி, இரு கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், பாஜக தொடர்ந்து தேமுதிகவை கூட்டணியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் வற்புறுத்தி வரும்  நிலையில், கூட்டணி வேண்டுமா இல்லையா என்பது குறித்து நாளை மாலைக்குள் தெரிவிக்க அதிமுக கெடு விதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.